என் இனிய விவாகரத்தே!!4

Divorce 4

என் இனிய விவாகரத்தே!!4

4 என் இனிய விவாகரத்தே!!

ஆஆஆஆஆஆ படுக்கையில் கிடந்த ஸ்ரீநாத் பதறி எழுப்பினான் ..

"கொன்னுட்டேன் அய்யோ நான் கொலைகாரன் ஆகிட்டேன், என் பிள்ளை அனாதை ஆகிடுச்சு கடவுளே போச்சே போச்சே "என்றவன் முன்னே போனை பேசி கொண்டே ரஞ்சனி போவது தெரிய 

அப்பாடா!! பெருமூச்சு விட்டான் ... அவள் செய்த துரோகம் மறக்க முடியாது ஒரு மாதமாக கத்தி மேல் நடக்கிறான் தினமும் சாகிறான்... தினமும் அவளை கொன்று விட தோன்றுகிறது... அவன் வேலைக்கு போன பிறகு ...ரஞ்சனி யாரோ ஒருவனோடு கை கோர்த்து தியேட்டர் ஷாப்பிங் என்று சுற்றுவதை கண்ணால் கண்ட பின்பு இன்னும் அவள் மீது வெறி கூடியது...ஆனாலும் பொறுமையாக இருக்க ஒரே காரணம் ...

ப்பா என்று மகன் வந்து தகப்பன் அருகே படுக்க பிள்ளையை திரும்பி பார்த்தான் ஸ்ரீ ...தருண் அழகான சுட்டி குழந்தை , அந்தப் பிள்ளை என்ன பாவம் செய்தது ?

அவன் ஆத்திரத்தில் பதறி இவளை கொன்று விட்டால், இந்த குழந்தையின் நிலை என்ன?? தவறு நடந்துவிட்டது அவனும் தவறாக முடிவெடுக்க விரும்பவில்லை நிதானமாக யோசித்தான்.  

எங்கே துரோகம் அரும்பி விட்டதோ அப்போதே காதல் செத்து மடிந்து மண்ணோடு போய்விட்டது.. இனி அது மறுபடியும் முளைக்க வாய்ப்பே இல்லை.... அவள் விருப்பம் அவன் என்று ஆன பிறகு , இனி இவன் அவள் வாழ்க்கையின் ஒட்டிக்கொண்டு இருப்பதில் பிரயோஜனமும் இல்லை... அப்படியே இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் ஒருவேளை உலகில் நடப்பது போல தன் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் அவனையும் குழந்தையையும் கொல்ல வேண்டும் என்று அவள் முந்திவிட்டால் ... இல்லை அவள் செய்யும் செயலில் ஆத்திரம் தலைக்கேறி தன் பொறுமையை இழந்து அவளை இவன் கொன்று விட்டால்... எப்படி பார்த்தாலும் கேள்விக்குறியாக போவது குழந்தையின் வாழ்வே... 

எனக்கு கடவுள் இவ்வளவு தான் விதிச்சிருக்கான் இந்த துரோகத்தின் வலியை சுமந்து கொண்டு இனிமேல் இந்த வாழ்க்கையை தொடர்வதா வேண்டாமா இந்த இரண்டில் ஒரு முடிவை தெளிவாக எடுப்பது சாலச் சிறந்தது என்று பொறுமையாக யோசித்தான்

எல்லோருக்கும் வாழ்க்கையில் எல்லாமும் நல்லதே நடக்கும் என்பதே முட்டாள்தனம்... வாழ்க்கையில் நினையாத நேரங்களில் புயலும், சூறாவளியும் சுழன்று தான் அடிக்கும் அவற்றின் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் தப்பு செய்த அவர்களே வாழும் பொழுது, நாம் வாழ ஏன் முயற்சி எடுக்கக் கூடாது என்று ஒரு நிமிடம் நின்று யோசித்தால் நன்று ....

குழந்தையை தாய் வீட்டில் விட்டுவிட்டு ரஞ்சனி உள்ளே வர ... ஸ்ரீநாத் இன்னும் வேலைக்கு போகாமல் படுக்கையில் படுத்திருப்பதை கண்டவள் நகத்தை கடித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்தாள்.. 

வேலைக்கு போகல" என்று மெல்ல படுக்கையில் அவன் அருகே வந்து ரஞ்சனி அமர ... எழும்பி அமர்ந்த ஸ்ரீநாத் அவள் மறைத்து வைத்துவிட்டு போயிருந்த போனை எடுத்து அவள் முன்னால் வைக்க, அவன் செயலில் ரஞ்சனி நாக்கு வரண்டு பயந்து வியர்த்து வடிந்து எச்சில் விழுங்கி ஸ்ரீநாத்தை பார்க்க

என்ன சந்தேகப்படுறீங்களா? அவரும் நானும் வெறும் ப்ரெண்ட்தான்... என்று மென்று விழுங்க 

"பிரண்டு கூட சினிமா போனது தப்பு இல்ல, ஃப்ரெண்ட் கூட ஷாப்பிங் போனது தப்பு இல்ல ஆண் நண்பர்கள் இருக்கவே கூடாதுன்னு நான் சொல்லவே இல்ல... ஆனா , ஒரு ஆண் நண்பன் கூட லாட்ஜ் வரைக்கும் போறது சரியான்னு எனக்கு தெரியலையே ரஞ்சனி "என்ற நேரடி கேள்வியில் அவள் தலை தானாக தொங்கி கொண்டது..

தன்னை நோட்டம் போட்டு இருக்கிறான் கையும் காலுமாக பிடிப்பட்ட உணர்வில் ரஞ்சனி இருக்க.... 

"நீ தப்புன்னு சொல்ல கூடிய யோக்கியதை எனக்கு இருக்கான்னு தெரியல ரஞ்சனி... ஏன்னா நீ என்கிட்ட ஏதோ எதிர்பார்த்து இருக்க.,என்னால ஒருவேளை அதை கொடுக்க முடியலையோ என்னவோ தெரியல... அதனால நீ என்னை விட பெஸ்ட்டா ஒன்னை செலக்ட் பண்ணி இருக்கேன்னு எனக்கு நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்... ஆனா ஒன்னே ஒன்னு ரஞ்சனி, நான் எங்க தப்பு பண்ணினேன்.. ஒரு கணவனா நான் எங்க தோத்து போனேன்னு மட்டும் சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... பதில் இல்லாது அமைதியாக ரஞ்சனி இருக்க.. 

"என்ன புடிக்கல , உன் கூட வாழ விருப்பம் இல்லைன்னு சொல்லி இருந்தா சத்தம் இல்லாமல் கிளம்பி போயிருந்துருப்பேன்.. நீயும் நிம்மதியா இருந்திருக்கலாம்... நானும் நிம்மதியா இருந்திருக்கலாம் ஏன் இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிட்ட , "அடக்கப்பட்ட வலி அவன் வார்த்தையில் தெரிந்தது...

தவறு செய்பவர்களுக்கு எப்போதுமே ஒரு எண்ணம் உண்டு, நாம் செய்வது சரி என்று... 

"என்னை மட்டும் குறை சொல்லாதீங்க வேலை வேலைன்னு வேலை பின்னாடி சுத்துனா... வீட்ல சும்மாவே இருந்தேன், பேஸ்புக்ல அவர் கூட எனக்கு பழக்கம் ஆச்சு .. ரொம்ப அக்கறையா, அன்பா பேசுனார்.... என் கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணினார், எனக்காக பார்த்து பார்த்து செஞ்சார்.. என்னோட ஒரு மணி நேரம் கூட உங்களால உட்கார்ந்து பேச முடியாது ... சண்ட தான் வரும்... ஆனா , அவர் கூட பல மணி நேரம் உட்கார்ந்து பேசினாலும் , எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு சின்ன வாக்குவாதம் கூட இதுவரைக்கும் வந்ததில்லை... என் தனிமையை முழுசா போக்குனார்... நான் ஆசைப்பட்டு கேட்டது எல்லாம் செஞ்சார் ... முக்கியமா உங்களை போல பத்து ரூபாய்க்கும் ஐஞ்சு ரூபாய்க்கும் கணக்கு பார்க்கிறவர் இல்லை தெரியுமா ?எப்போ எப்படி நட்பு காதல் ஆச்சுன்னு தெரியாது... அவர் மேல காதல் வந்துடுச்சு தப்பு இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா அந்த தப்புக்கு முழுக்க காரணம் நீங்கதான்!! 

நானா ??

ம்ம், நீங்க ஒரு பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டிய இடத்தையும் அவளுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுத்து இருந்தா ... நான் ஏன் தவறான வழி தேடி போக போறேன் சொல்லுங்க என்றவள் விவாதத்தில் சிரித்த ஸ்ரீநாத் ...

இதுக்கு பேர் காதலா ரஞ்சனி?"

"எனக்கு இதுக்கு பேரு காதல்தான் ... அவர் கூட பழக ஆரம்பிச்ச பிறகு உங்களை நான் தொட விட்டதே கிடையாது தெரியுமா??

நல்ல கொள்கை !! என்று முனங்கியவன்... 

"உன்னோட புனிதமான காதலுக்கு என்னால ஆன பரிச நான் தரணும்ல.. உன்ன பார்க்க பார்க்க எனக்கு கோபமா வருது ரஞ்சனி, எங்க உன்ன கொன்னுட்டு என் வாழ்க்கை முழுவதையும் ஜெயில்ல கழிச்சிடுவேனோன்னு பயமா இருக்கு... என் பிள்ளை தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாம அல்லாடிருமோன்னு பயமா இருக்கு... போதும், இந்த கல்யாண வாழ்க்கையை முடிஞ்ச வரைக்கும் கயிறு கட்டி இழுத்துடத்தான் நெனச்சேன் ... ஆனா , கயிற நான் மட்டும் பிடிச்சு இழுத்தா நான்தான் அத்து விழுவேன்னு இப்பதான் எனக்கு தெரிஞ்சுச்சு" என்றவன் சட்டென ரஞ்சனி கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கைவிட்டு அத்து விட்டான்... அவள் அமைதியாக இருக்க 

"எதுக்கு தொங்குது ஏன்னே தெரியாம தொங்குற இந்த தாலிக்கொடிக்கு இனி வேலை இல்ல... என் தாலியை சுமந்துகிட்டு அவன்கூட வாழ உனக்கும் கஷ்டமா இருக்கும்.. அடுத்தவன் பொண்டாட்டி கூட வாழ அவனுக்கும் கஷ்டமா இருக்கும் .. ஏன் இத்தனை பேருக்கும் கஷ்டம் .. இது கட்டுன எங்கிட்டேயே இருந்துடட்டும்... நான் உனக்கு டைவர்ஸ் தந்திடுறேன்... அவன் தீர்க்கமான பதிலில் ரஞ்சனி அதிர்ந்து போய் ஸ்ரீதரை பார்த்தாள் ....

"இப்போ ஏன் இந்த அவசர முடிவு 

"வேற என்ன செய்ய சொல்ற ரஞ்சனி? நீ அடுத்தவன் கூட ஊர் மேய போறதுக்கு விளக்கு பிடிக்க சொல்றியா?? இல்ல படுக்கையை விரிச்சு நீங்க படுத்து உருள்றதை பக்கத்துல இருந்து பார்க்க சொல்றியா என்ன செய்யணும்னு நீயே சொல்லு... 

"நான் மட்டுமா இந்த தப்பு செய்றேன், போய் பாருங்க ஊர்ல பாதி பேர் இப்படி தான் சுத்திட்டு இருக்காங்க... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வாழ கூடாதா?

"ஓ கள்ள புருஷன் வைக்கிறதும் கள்ள பொண்டாட்டி வைக்கிறது தான் ட்ரெண்டிங்கா? சபாஷ்!! தமிழ்நாடு எங்கேயோ போயிடுச்சுல்ல ... நான் மானங்கெட்ட நைன்ட்டி கிட்டாவே இருந்துக்கிறேன், முத்தம் கொடுத்தா பிள்ளை பிறந்துடும் , மாற்றான் பொம்பள கண்ண பார்த்தா நரகத்துக்கு போயிடுவோம்னே வளர்ந்துட்டேன் அதான் இந்த ட்ரெண்ட்டிங் ஏத்துக்க முடியல... உன் அளவு பக்குவம் எனக்கு இல்லை நானே இந்த தப்புக்கு காரணம்னே வச்சிப்போம் அதை நானே சரி பண்ணிடுறேன்..

என்....ன பண்ண போறீங்க??

மியூச்சுவல் டைவர்ஸ் வாங்கிக்கலாம்...  

எனக்கு யோசிக்கணும் " 

"உன் காதலன் கிட்டதான கேட்கணும்.. கேட்டு சொல்லு அவர்தான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறாரே, உன்ன மனம் கோணாம வச்சிப்பார்.... பின்ன என்ன பிரச்சனை ??

இல்லை அவர் பொண்டாட்டி , பிள்ளை எல்லாம் விட்டு என்று ரஞ்சனி இழுக்க ....ஸ்ரீதருக்கு சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை...

அது உங்க பாடு டைவர்ஸ் பேப்பர் கொண்டு வர்றேன் கையெழுத்து போட்டுட்டு கிள்மபு என்று எழும்பி போய்விட...

என்னால இப்ப டைவஸ்ல் தர முடியாது" மாலை உள்ளே நுழைந்த ஸ்ரீதருக்கு ரஞ்சனி பதில் வர.... அவன் பின்னேயே ரஞ்சனி தாய் தகப்பன் வர ....

கொஞ்ச நாள் உங்க வீட்டுல இருக்கட்டும் கூட்டிட்டு போங்க என்று முடித்து விட்டான்.. 

மாப்பிள்ளை ஏன் என்னாச்சு.... 

"ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிக்கலாம்னு முடிவு எடுத்து இருக்கோம் காரணம் அவ சொன்னா கேட்டுக்கோங்க இல்லை விட்டிருங்க... எனக்கு சம்மந்தம் இல்லாத ஒரு பெண்ணை பத்தி தவறா பேசுறது முறை இல்லை கூட்டிட்டு போங்க "

"குழந்தை "என்று மாமியார் இழுக்க 

"அது என் பிள்ளை என்கிட்ட தான் இருக்கும் நான் பார்த்துக்கிறேன்,  

"அம்மா தேடுமே மாப்பிள்ளை 

"அப்படி அம்மா தேடினா தர்றேன் வேலைக்கு போகணும் சீக்கிரமா கிளம்பினா நல்லா இருக்கும் 

"என்னடி பண்ணி தொலைஞ்ச" என்று ரஞ்சனி தாய் தகப்பன் அவளை திட்டி அழைத்து போக ,தான் செய்த தவறை வாய் திறக்கவே இல்லை .... 

"எந்த ஒரு பந்தத்தையும் புனித பந்தம் என்று சொல்வது இல்லை... திருமண பந்தம் தான் புனிதம் என்பர், தாலி ஏறும் வரை எப்படியோ, தாலி ஏறிய பின்பு தாம்பத்ய அறநெறியை கடைபிடித்தே ஆக வேண்டும் மாற்றான் மனை மட்டும் அல்ல, மாற்றாள் மனை நோக்குவதும் தவறே !!